திங்கள், டிசம்பர் 29, 2008

தடம் எண் 143ல் கொஞ்சல் Express...


இரயிலில் செல்லும் போது
என்னை உன்னால் எதுவுமே
செய்ய முடியாதே என என்னிடம்
பழிப்பு காட்டுகின்றாயாடி...??
இப்படியெல்லாம் தேவை
இல்லாமல் என்னை
சீண்டிவிட்டு....
அப்புறம் என்னைக்
குற்றப்படுத்தாதே...


நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!


உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...


இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!


எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....


இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...


கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...


இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...


முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?

பின்குறிப்பு :‍‍‍‍

தோழி காயத்ரியின் கவிதைக் கருவிற்காக நான் முயற்சி செய்தது...

காயத்ரியின் இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!

இதே கவிதைக்கருவிற்கு கவிஞர் ஸ்ரீ எழுதிய ர‌(ம)யில் காதலன்


திங்கள், நவம்பர் 10, 2008

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...


கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...


இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??


உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?


அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??


'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...


அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??


உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?


இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?


எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?


அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?


இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..


கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..



இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?



புதன், செப்டம்பர் 10, 2008

ச்ச்சீய்ய்... போடா....


உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா...



எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??



ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ...



என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்...



தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..


உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்...?



நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...




யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?


கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே...
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!


உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...


உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?




இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?


செவ்வாய், ஆகஸ்ட் 26, 2008

கொஞ்சவோ... மிஞ்சவோ...




நீ ஆரம்பித்தால்


என்ன


நான் ஆரம்பித்தால்


என்ன‌


சண்டையின் முடிவை


எங்கிருந்துஆரம்பிக்கட்டும்..?


கொஞ்சல்களிலா..


இல்லை மிஞ்சல்களிலா..







நீ

கோபமாயிருக்கையில்

உன்னைக் கொஞ்சும் போது

அதை ரசிக்காத மாதிரி

நீ நடித்துக்கொண்டிருக்கும் போது

இன்னும் கொஞ்சம் அழகாக

இருக்கடி செல்லம்...




என்னதான் சொல்லு...

உன்னிடம் சண்டையிடும்

சுகமே தனிதான்....

'காச்' 'மூச்' சென்று

சண்டையிடும் உன்

அழகான குரலுக்காகவேணும்

உன்னிடம் குட்டி குட்டியாய்

சண்டையிட வேண்டும் நான்....



என்னை எப்படியெல்லாம்

திட்டினாய்

இனி ஜென்மத்துக்கும்

உன்னிடம் பேச மாட்டேன்

என கோபமாகச் சொன்னால் எப்படி..?

சரி உன் இஷ்டம் ...

அப்போ நான் என்ன செய்தாலும்

சிணுங்கக் கூட கூடாது

சரியாடி..?




நினைத்து நினைத்து

ஒவ்வொன்றாகச்சொல்லி

சலிக்காமல்

எப்படி உன்னால் மட்டும்

சண்டையிட முடிகிறது....?

இவ்வளவு நினைவுகளையும்

சுமந்து நிற்கும்

உன் மனதுக்கு

பல‌முத்தங்களைப்

பரிசாக‌த் தருகிறேன்

என்றாலும் முறைக்கிறாய்

என்னடி செய்ய நான்..?



உன்னிடம் நான்

எதற்கெடுத்தாலும்

சண்டையிடுவதாய்

என்னிடம் கோபமாகச்

சொல்கிறாய்

எதையோ அல்ல...

உன்னை எடுக்கத்தான்..

என உன் மரமண்டைக்கு

தெரியவில்லையாடி...??




சும்மா இருந்தால்


மறந்து விடுவேன் என


நினைத்துதானே


என்னிடம் சண்டை போட்டு


ஒவ்வொருநொடியும்


உன்னைநினைக்க வைக்கிறாய்...?


சரியான நினைவு திருடிடி நீ...




போதும் இனி

என்னுடன்பேசாதே

எனக் கோபமாகச்சொல்கிறாய்...

சரி என் வாயை மட்டும்

இனி உன்னிடம்பேசாமல்

இருக்கச்சொல்கிறேன்

போதுமா...?



வார்த்தைகளால்

உன்னைக்காயப்படுத்துகிறேன்

என ஏண்டி அபாண்டமாக‌

பழிசொல்கிறாய்...??

நீ காயப்பட்டால்

வலிக்கப் போவது

எனக்குத்தான்

எனத் தெரியாதா உனக்கு..?



எவ்வளவுதான் மறைத்தாலும்

மறைக்கமுடியாத‌

உன் அழகுபோல‌

என்னதான்கோபமாக

இருந்தாலும்

அவ்வப்போது

என்னைப்பார்க்கும்

உன் கண்களின்

காதலை மறைக்கப்

படும்பாடு ரொம்ப

அழகாக‌ இருக்குடி

செல்லக்குட்டி..



நீ இவ்வளவு

ரோஷக்காரியாடி..??

ம்ம்ம்ம்...

கொஞ்சம் எனக்கும்

உன் ரோஷத்தைக்

கடன் கொடேன்...

உன் குரல் கேட்டாலே

எங்கோ

அதுதொலைந்து

போகிறது...



ஏதோ சண்டையை

ஆரம்பித்து

வைத்துவிட்டேன்

உன்னை

சமாதானப்படுத்துவதற்குள்

எத்தனை முத்தங்கள்

செலவாகப்

போகின்றனவோ..??!!!



என்னதான் உன் மீது

கோபம் வந்தாலும்

எல்லாவற்றையும்

வற்ற வைக்கும் உன்

ஒரு துளி கண்ணீரை

என்ன‌செய்வது நான்....??


புதன், ஜூலை 16, 2008

கொஞ்சம் கொஞ்சேன்....



கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய் என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??




நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??




என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...




ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...




ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...




உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...





என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...





உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...





என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?




நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய்
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?




உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...